Monday, October 24, 2011

Theodore Boone: The Abduction 2011 / ஆங்கில புத்தகம்



அதிகாலை 4 மணியிருக்கும், உங்களுக்கு ஒரு போன் கால் வருகிறது. எடுத்து பேசினால், எதிர்முனையில் ஒரு போலிஸ்காரர். உங்களுடைய உயிர் தோழி காணாமல் போய்விட்டதாகவும் அவள் கடைசியாகப் பேசியது உங்களுடன் தான் என்பதால் விசாரணை செய்ய தோழியின் வீட்டுக்கு வரச்சொல்கிறார் என்றால் எப்படியிருக்கும்.

உடனே இது ஒரு காதல் கதை என்றும், ஹீரோ காடு, மலை எல்லாம் தேடி, கடத்திய வில்லனை கண்டுபிடித்து சண்டை போட்டு ஹீரோயினை மீட்கப் போகிறார் என நினைத்து விடாதீர்கள்.

புத்தகத்தை எழுதியவர் - John Grisham. இந்த புத்தகத்தின் ஹீரோவுக்கு (Theodore Boone) வயது பதினாலுதான். இது காதல் கதை அல்ல. Theodore Boone னின் அப்பா, அம்மா இருவருமே வழக்கறிஞர்கள். அதனால், தியோவுக்கு கோர்ட் என்றாலோ, போலிஸ் என்றாலோ பயம் கிடையாது. அமெரிக்க சட்டம் பற்றியும் நல்ல அறிவு உண்டு. -  John Grisham எழுத்தாளராக ஆவதற்கு முன்னர் வழக்கறிஞராக வேலை பார்த்தவர் என்பதால், இவருடைய முக்கால்வாசி கதைகள் கோர்ட் மற்றும் வக்கீல்கள் என்ற பிண்ணணியைக் கொண்டிருக்கும்.

புத்தகத்தின் கதை இதுதான். தியோவுடன் பள்ளியில் படிக்கும் ஏப்ரல் திடீரென ஒரு நாள் அதிகாலையில் காணாமல் போகிறாள். அவள் கடைசியாகப் பேசியது தியோவுடன் தான் என்பதால் போலிஸ் அவனை கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். போலிஸால் ஏப்ரலையோ, கடத்தியவனையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

தியோவும், அவனது பள்ளி நண்பர்களும் விஷயத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு ஏப்ரலை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. பள்ளியில் படிக்கும் சிறுவன் தான் ஹீரோ என்பதால் கதையில் அவ்வப்போது தொய்வு விழத்தான் செய்கிறது. இருந்தாலும் கதை மொக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. காரணம் - ஜான் கிரிசத்தின் எழுத்து. அவருடைய வர்ணனை மற்றும் வார்த்தை தேர்வு நன்றாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக 13 வது அத்தியாயத்தைப் படிக்கும்போது கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும். ஜான் கிரிசம் நல்ல நகைச்சுவையும் எழுதுவார் என்பதை நிருபித்து இருப்பார்.

தமிழ் மீடியத்தில் படித்து விட்டு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச சிரமப்படுபவர்கள், ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதன் மூலம் அன்றாட உரையாடலில் பயன்படுத்தப்படும் நிறைய ஆங்கில சொற்களை தெரிந்து கொள்ளமுடியும். அந்த வகையில்  ஜான் கிரிசமின் நாவல்கள் நல்ல பயன் தரும். இது என் அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது. உங்களுக்கும் உதவும் என நம்புகிறேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

2 comments:

கேரளாக்காரன் said...

Finished this book last night my opinion is " the house of death is better than this" thanks

Bala said...

who is the author of this book - "The house of death" I will try to read it. I searched in google and got too many different books....

Post a Comment