Wednesday, October 26, 2011

பயணங்கள் முடிவதில்லை - சுற்றுலா



பள்ளியில் மூன்றாவது படித்தபோது கல்விச் சுற்றுலா என்று சொல்லி கேரளாவுக்கு சென்றதுதான் முதன் முதலில் சென்ற சுற்றுலா. அதில் போனபோது புது இடங்களைப் பார்க்கும் சந்தோஷத்தை விடவும், தொலைந்து போய்விடுவோமோ என்ற பயம்தான் மிகுந்து இருந்தது. மழம்புளா டேம் பார்க்கில் ஒரு சிறிய தொங்கு பாலம் போல் ஒன்று இருந்தது. அதில் நடக்கும்போது கம்பி அறுந்து தண்ணியில் நான் விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற பயந்து, பாலத்தை கடக்க அரைமணி நேரம் யோசித்துக் கொண்டிருந்த கொடுமையெல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது.
அதனாலேயே அந்த சுற்றுலா மனதில் நிற்க வில்லை. அதோடு விடாமல், அங்கு சென்று வந்ததைப்பற்றி ஒரு கட்டுரை வேறு எழுத சொல்லி ஆசிரியர் படுத்தியது வேறு கதை.

அந்த அனுபவத்திற்கப்புறம் வெளியிடங்களுக்கு சென்ற அனுபவங்கள் எல்லாம் நன்றாகவே இருந்தன. டூர் என்று நினைக்கும்போதே, ஒரு குதூகலம் வருவதை இப்போதும் உணர முடிகிறது. சொந்தமாகவோ, வாடகைக்காகவோ கார் வைத்துக்கொண்டு போக முடியாததால், பேருந்து மற்றும் ரயில் பயணங்கள் தான் செய்தோம். புது இடங்களைப் பார்ப்பது ஒருவகையான சந்தோஷம் என்றால், அந்த இடங்களுக்கு செல்லும் பயணங்கள் வேறுவிதமான சந்தோஷத்தைக் கொடுத்தன. ஊட்டி, கொடைக்கானல், அதிரப்பள்ளி அருவி போன்ற மலைப் பிரதேசங்களுக்கு முதன் முறையாகப் பேருந்தில் சென்றபோது, ஒவ்வொரு ஹேர்பின் வளைவுகளிலும், பேருந்து கவிழ்ந்து விடுமோ என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு, அடிவயற்றில் ஒரு பயத்தோடு இருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது.

இரண்டு, மூன்று தடவை ஊட்டி சென்றபின் அந்த பயமெல்லாம் காணாமல் போய்விட்டது.

இதுபோல வெளியிடங்களுக்கு போவதெல்லாம், கல்லூரியில் படிக்கும் வரைதான் இருந்தது. வேலைக்குப் போக ஆரம்பித்ததும், சென்னையிலிருந்து சொந்த ஊர் கோவைக்குப்போவது மட்டும்தான் பயணம் என்று ஆனது. ஒவ்வொருமுறை கூடவேலை செய்த நண்பர்களுடன் வெளியிடம் செல்ல திட்டம் போடுவதெல்லாம் திட்டத்தோடே நின்று விட்டது. யாருக்காவது பிறந்த நாள் என்றால் கூட்டமாக ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதுதான் அவுட்டிங் என்றானது. கல்யாணம் ஆனதற்கப்புறம் அதுவும் குறைந்து போனது.

எங்கோ படித்தது - "குறைந்த பட்சம் ஆறு மாதம், அதிக பட்சம் ஒரு வருட காலத்தில், நாம் இதுவரை வாழ் நாளில் பார்க்காத இடத்தைச் சென்று பார்க்கவேண்டும்". என்று சொல்கிறார்கள். அப்படி கடைசியாக நீங்கள் புதிதாகச் சென்று பார்த்த இடம் என்ன, எப்போது பார்த்தீர்கள் என்று யோசியுங்கள். நம்முடைய அவுட்டிங் எல்லாம், பெரும்பாலும் சினிமா செல்வதிலும், பீச் போவதிலும் முடிந்து விடுகிறது. இவ்வாறு பார்த்த இடங்களையே பார்த்து நம் பார்வை சுறுங்கி விடுகிறது. பார்வையோடு சேர்ந்து மனமும் சுறுங்கி விடுகிறது. அதனால் மனம் சோர்ந்து, வாழ்க்கையும் போரடிக்க ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் இப்படி மனம் சுறுங்குவதை நாம் உணர்வதில்லை.


இது வரை பார்த்திறாத இடத்தைப் பார்க்கும்போது, அந்த இடமும், அந்த பயணமும், நம்மை புதுப்பிக்கிறது. கொஞ்ச நேரம், பொறுப்புகளையும், கவலைகளையும் மறந்து சிறுகுழந்தையாகவே மாறிவிடுகிறோம். எப்போதும் சுறுங்கியிருந்த பார்வை அன்று மட்டும் விரிந்து பார்க்கிறது. பார்வை விரிவதால் மனமும் விரிகிறது. மனம் விரியும்போது மனம் லேசாகி, வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் நம்பிக்கையாக மாறுகிறது. ஆனாலும், வேலை பளு காரணமாகவோ, செலவாகும் என்பதாலோ, அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிப்போட்டோ இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது வருத்தத்திக்குரியது ஒன்று.


No comments:

Post a Comment