Thursday, October 13, 2011

நேர்மறையும் எதிர்மறையும்

எதாவது புதிய விஷயம் முயற்சி செய்யலாம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?. புதிய விஷயம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். புதிதாக தொழில் துவங்க ஆசைப்படலாம். உதாரணத்திற்கு குதிரை ஏற்றம், கராத்தே, இசைக்கருவி வாசித்தல் போன்ற எதையாவது ஒன்றை டைம் பாஸ்க்காகவோ அல்லது மனதிருப்திக்கோ கற்றுக்கொள்ள ஆசைப்படலாம்.
இவ்வாறு ஒருவர் யோசிப்பதே பெரிய விஷயம். அப்படி வந்த யோசனையில் எதாவதொன்றை செய்யப்போவதாக நண்பர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ கூறிப்பாருங்கள். ஏறக்குறைய எல்லோருமே சொல்லும் முதல் வார்த்தை, இதில் எதாவதொன்றாகத்தான் இருக்கும்.

"எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்"
"இதெல்லாம் ஒத்து வராது",
"இது ரொம்ப கஷ்டம்",
"உன்னால் எல்லாம் இது முடியுமாடா".

என்ன காரணமோ, எந்த ஒரு புதிய விஷயம் பற்றிக் கேட்டவுடன், அதற்கு எதிர்மறையான எண்ணங்களும் வார்த்தைகளும் தான் முதலில் வருகிறது.

நான் இருந்த இடத்தில் 40 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி ஒன்று நடந்தது, அதில் முதல் பரிசு 10 லட்ச ரூபாய் என கேள்விப்பட்டு,  நானும் அடுத்தவருடம் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்க ஆசைப்படுவதை சொன்னேன். அதுக்கு வந்த பதிலப் பாருங்க.
"உனக்குத் தெரியுமா, இந்தப் போட்டியில மட்டும் ஒவ்வொரு வருஷம் 45,000 பேர் கலந்துக்கிறாங்க. அதுல நிறைய பேரு இதையே தொழிலா வைச்சு இருக்கறவங்க. அவங்க கூட எல்லாம் உன்னால போட்டி போடமுடியாது."
"சரிப்பா, நானும் இப்போ இருந்து ஒரு வருஷம் பிராக்டீஸ் பண்ணப்போறேன், அப்ப என்னால ஜெயிக்க முடியுமல்ல"
"நீ வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்தாலும், உன்னைமாதிரியே எத்தனையோபேர் வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்வாங்க. அவங்க கூட எல்லாம் உன்னால போட்டி போடமுடியாது. ஓவ்வொருத்தங்க இதுக்குனே தனியா கோச் எல்லாம் வைச்சிருப்பாங்க. நீ என்ன பண்ணமுடியும் அதுனால இதெல்லாம் ஒத்து வராது. பேசாம இப்ப இருக்கற வேலைய ஒழுங்க செய்தா அதுவே போதும்"

இந்த விவாதமே இப்படி நடந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

"அப்படியா, நல்ல விஷயம் தான் சொல்லி இருக்க. உனக்கு ஒன்னு தெரியுமா, இந்தப் போட்டியில மட்டும் ஒவ்வொரு வருஷம் 45,000 பேர் கலந்துக்கிறாங்க. அதுல நிறைய பேரு இதையே தொழிலா வைச்சு இருக்கறவங்க. அவங்க கூட எல்லாம் நீ போட்டி போடணும்னா நெறைய பிராக்டீஸ் செய்ய வேண்டியிருக்கும். அதனால இப்போ இருந்து பிராக்டீஸ் ஆரம்பிச்சிடு. ஒரு வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்தால் நீ ஜெயிக்கறதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும். அதேசமயம் நீ வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்தாலும், உன்னைமாதிரியே எத்தனையோபேர் வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்வாங்க. அதையும் ஞாபகம் வைச்சுக்கோ. சிலபேர் இதுக்குனே தனியா கோச் எல்லாம் வைச்சிருப்பாங்க. நீயும் ஒரு நல்ல கோச் கிட்ட சேரமுடியுமான்னு பாரு. 40 கிலோமீட்டர் ஓடறதுக்கு நல்ல ஆரோக்கியமா இருக்கணும். இப்ப இருந்தே அதையும் பார்த்துக்கோ. சரியா திட்டம் போட்டு, ஒழுக்கமா அதை பாலோஃ செய்தால் கண்டிப்பா சக்ஸஸ் தான்"

இரண்டு உரையாடலிலுமே ஒரே விஷயம் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கப்பட்டது.

நம்முடைய வளர்ப்பு முறையினாலோ, கல்வி முறையினாலோ அல்லது சமூக அமைப்பினாலோ, சிறுவயதிலிருந்தே எதிர்மறையாக பார்க்கமட்டுமே கற்றுக்கொண்டுள்ளோம் என தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க.

No comments:

Post a Comment