Sunday, October 9, 2011

சிறுதுளிகள் - (10/09/2011) - ஞாயிறு


கடைசியாக நீங்கள் யாருக்கு நன்றி சொன்னீர்கள் என்று நினைவு இருக்கிறதா?. வெறுமனே வாய் வார்த்தையாக இல்லாமல் உள்ளத்தில் இருந்து சொல்லியிருக்கவேண்டும். ரொம்ப நாட்களாகி இருக்கும்தானே. என்ன காரணத்தாலோ, நன்றியையும், மன்னிப்பையும் நமக்கு சொல்லவோ, கேட்கவோ அவ்வளவு எளிதாக முடிவதில்லை.
அப்படியெல்லாம் இல்லை, நான் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை உடனே சொல்கிற ஆள் என்று நீங்கள் சொன்னால், உண்மையாக உங்களை பாராட்டுகிறேன். நன்றி சொல்ல தயங்குவதற்கு என்ன காரணமாக இருக்கும். மனம் திறந்து நன்றி சொன்னால், உள்ளிருக்கும் நான் என்கிற ஈகோ அடிபடுமோ என்ற எண்ணமா? அல்லது இன்னொருவரிடமிருந்து உதவி பெறும் நிலையில் இருக்கிறேனே என்ற இயலாமை காரணமா என்று தெரிய வில்லை. ஒருவேளை நன்றி சொல்ல வேண்டும் என்ற பழக்கம் சிறுவயதிலிருந்தே இல்லாமல் வளர்ந்தது தான் காரணமா.... யோசித்துப் பார்ப்போம்.
----------------------------------------------------------------------------------------------
சினிமா பார்க்கும் போது எப்படிப் பார்க்கிறோம் என்பதை கவனித்து இருக்கிறீர்களா? ஒரு படம் பார்க்கும்போது, தன்னையே மறந்து பார்ப்பது என்பது இயல்பான விஷயமாக உள்ளது. படத்தில் வரும் எதாவது கேரக்டராகவே மாறிவிடுவோம். அடுத்தமுறை எதாவது சினிமா பார்க்கும் போது எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். சுய உணர்வோடு படம் பார்ப்பது என்பது இல்லை. அப்படிப்பார்ப்பதால் தானோ என்னவோ, படத்தில் நடக்கும் காட்சிகள் அப்படியே பாதிக்கின்றன. "என்னையே பார்த்த மாதிரி இருக்கு" என்றோ, "எம்மவனோட வாழ்க்கையை பார்த்த மாதிரியே இருக்கு" என்று படம் பார்த்து விட்டு வந்தவர்கள் சொல்ல கேட்டிருக்கிறீர்களா. இந்த மாதிரி திரைப்படம் பார்ப்பதோ, புத்தகம் படிப்பதோ யதார்த்தத்திலிருந்து கொஞ்சம் நேரம் நம்மை மறந்து இருக்க நாம் செய்யும் பழக்கமாக இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------
ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது இப்போதெல்லாம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. எந்த விஷயமும் தன்னுடைய நிலை மற்றும் தேவைக்கு சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்காமல், தனக்கு தெரிந்தவர்களின் நிலையை ஒப்பிட்டு பார்த்து அதில் திருப்தி அடைவததோ அல்லது வருத்தம் அடைவதோதான் அதிகம். இரண்டு சக்கர வாகனம் இல்லாதபோது அதை வாங்குவதுதான் குறிக்கோளாக இருக்கிறது. ஒருவழியாக வாகனம் வாங்கிவிட்டால் திருப்தி வருமா என்றால் அதுதான் இல்லை. பக்கத்து வீட்டுக்காரன் கார் வைத்திருக்கிறான், நமக்கும் ஒன்று இருந்தால் மதிப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதுவும் சரிதான் என்று கார் வாங்கி விட்டால் சொந்தக்காரன் இதை விட விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறான் என ஒப்பிட்டுப் பார்த்து மன அமைதி போகிறது. பள்ளியில் படிக்கும் பிள்ளை நல்ல மார்க் வாங்கியதை விடவும், தனக்கு தெரிந்தவர்களின் பிள்ளைகளை விடவும் அதிகமான மார்க் வாங்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுப்பையன் நன்றாக டான்ஸ் ஆடுவான் என்றால் தன் பிள்ளையும் டான்ஸ் ஆடவேண்டும் என்று எதிர்பார்ப்பு வருகிறது.
----------------------------------------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது

முட்ட வரும் காளை மாட்டிடம், நான் சைவம் என்று சொன்னால் மட்டும் உங்களை முட்டாமல் விடுமா என்ன?
------------------------------------------------------------------------------------------------

2 comments:

Unknown said...

//முட்ட வரும் காளை மாட்டிடம், நான் சைவம் என்று சொன்னால் மட்டும் உங்களை முட்டாமல் விடுமா என்ன?//

தத்துவம் நெ.ஆயிரதொன்று.

Bala said...

@வெண் புரவி ........
:)
வருகைக்கு நன்றி

Post a Comment