ஒரு புது விஷயம் அரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம். தியானம் கற்றுக்கொள்ளலாம். புத்தகம் வாசிக்கலாம். பிளாஃக் எழுத ஆரம்பிக்கலாம். காலையில் நேரமே எழ முயற்சிக்கலாம்.
இப்படி எது செய்ய ஆரம்பித்தாலும் முதல் இரண்டு நாட்கள் நல்ல சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர்வோம். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு சுணக்கம்/சோம்பேறித்தனம் வருவதை உணர்ந்து இருக்கிறீர்களா? பெரும்பாலான நேரங்களில் அந்த சோம்பேறித்தனம் நம்மை ஜெயித்து விடும். முதலில் ஒரு நாள் விடுமுறை விடுவோம். பின்னர் அது இரண்டு நாள் என ஆகும். ஒரு வழியாக ஆரம்பித்த விஷயத்தை நிறுத்தி விடுவோம். எப்பாடு பட்டாவது அந்த மூன்றாம் நாள் சோம்பேறித்தனத்தை தாண்டி விட்டால், பின்னர் அந்த புது விஷயம், நம்முடைய வழக்கமாக மாறிவிடுவதை உணர்ந்து இருக்கிறீர்களா?
--------------------------------------------------------------------------------------------------
ஒருவருடைய உண்மையான முகம் தெரியாவேண்டுமென்றால், அவருக்கு கொஞ்சம் அதிகாரம் கொடுத்துப்பார் என்று யாரோ சொன்னார்கள். அது சத்தியமான வார்த்தை. அதற்கு தக்க உதாரணம், எங்களுக்குடைய மேலதிகாரி. அவருக்கு கீழ் வேலை செய்பவர்களை மனிதர்கள் என்று மதிப்பதில்லை. அடிமைகளை விடவும் கேவலமாகத்தான் நடத்துவார். ஒரு கட்டத்திற்கு மேல் பணம் சம்பாதிப்பதில் மனிதனுக்கு திருப்தி போய்விடுகிறது. ஆனால் அதிகார போதை என்பது சாகும் வரை விடுவதில்லை. இப்போதுதான் எனக்கு புரிகிறது, அரசியல்வாதிகள் பதவியைத் தக்க வைக்க எந்த அளவுக்கும் போவது இந்த அதிகார போதையினால்தான் என நினைக்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------
எல்லா பிரச்சனையையும் பேசித்தீர்க்கலாம் என்று சொல்லுகிறார்கள். நானும் அதை நம்பி இருக்கிறேன். ஆனால் அது எல்லா நேரங்களில் உண்மையாக இருப்பதில்லை. காரணம் நாம் எந்த பிரச்சனையைப் பற்றி எவ்வளவு தெளிவாகப் பேச ஆரம்பித்தாலும், எதிரிலிருப்பவர் அதற்கு காது கொடுத்து கேட்கவிட்டால் பிரச்சனை என்பது எப்போது தீரப்போவது இல்லை. அப்போ பிரச்சனையைத் தீர்க்க என்னதான் வழி.....
------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சிறுவயதில் மூன்று வயது ஆன பின்னர், "பால்வாடி" யில் சேர்த்து விட்டார்கள். அங்கு தினமும் ஒரே பாடம் தான். ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவதை ஒரு பாட்டாகப் படிப்போம். உயிரெழுத்துக்கள் 12 - அடுத்த பாட்டு. ஆங்கில எழுத்துக்கள் 26 - கடைசி பாட்டு. இது எல்லாவற்றையும் ஒரு போர்டில் எழுதி இருப்பார்கள். வருட ஆரம்பத்தில் எழுதப் பட்டதை மீண்டும் அடுத்த ஆண்டு துவங்கும் போது தான் அழித்து எழுதுவார்கள். வாரம் ஒரு முறை சத்து மாவு கொடுப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். மதிய உணவுக்கு பிறகு மாலை வரை எல்லோரும் உறங்குவோம். இது தான் வருடம் முழுமைக்கும் நடக்கும். ஐந்து வயது முடிந்து ஆறு வயது ஆரம்பிக்கும்போது பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். இது நடந்தது 1980 களில். கொஞ்ச வருடங்களுக்கு முன்னால், பால்வாடிக்கு மாற்றாக LKG மற்றும் UKG என்று தனியார் பள்ளிகளில் கொண்டு வந்தார்கள். பிள்ளைகளுக்கு மூன்று வயதானதும் LKG யில் சேர்த்து விட்டு புத்தகப்பையை முதுகில் சுமக்க விட ஆரம்பித்தோம். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், LKG க்கு முன்னாடி Play School என்று ஆரம்பித்துவிட்டு, LKG க்கு போக குழந்தைகளை தயார் செய்கிறோம் என்று சொல்கிறார்கள். இது இப்படியே போனால், குழந்தை அம்மாவின் வயிற்றிலுருக்கும் போதே கல்வியை ஆரம்பிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
Success is not the key to happiness. Happiness is the key to success.
2 comments:
நல்ல எழுத்து நடை....
தேர்ந்த எழுத்தாளரை போல் எழுதுகிறேர்கள் ..வாழ்த்துக்கள்...
ராஜ் - வருகைக்கு நன்றி.
Post a Comment