அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் 99 சதவிகிதம் பேர், வெள்ளிக்கிழமை வரும்போது முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிவது போல சந்தோசமாக இருப்பார்கள். திங்கட்கிழமை வரும்போது ப்யூஸ் போன பல்ப்பாக முகம் மாறி இருக்கும். செய்யும் வேலை பிடித்து போய் சந்தோசமாக செய்பவர்கள் மிகமிக குறைவுதான்.
எதனால் இந்த நிலைமை. வேலைதேட ஆரம்பிக்கும்போது பணம் சம்பாதிப்பது மட்டும் தான் வேலைக்குப்போவதின் முக்கிய நோக்கமாக படுகிறது. அதனால் எப்படியாவது நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைக்குப்போய் கை நிறைய சம்பாதித்தால் போதும் என்றுதான் நினைக்கிறோம். இந்த அவசரத்தினால் செய்யப்போகும் வேலை மனதிற்கு பிடித்தவேலையாக இருக்க வேண்டும் என்பதை யோசிப்பதில்லை. அப்படியே யோசித்தாலும், அது அந்த நேரத்திற்கு இரண்டாம் பட்சமாகத்தான் தெரிகிறது.
அப்படியே ஒரு நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைக்குச் சேர்ந்தாலும், வேலையில் சேர்ந்து விட்ட பிறகு நமக்கு வாய்க்கும் மேலதிகாரியைப் பொறுத்துதான் நிம்மதி. மனைவி அமைவதற்கு இறைவன் வரம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள் ஆனால் மேலதிகாரி அமைய யார் வரம் கொடுக்கவேண்டும் என்று தெரியவில்லை. ஹிட்லரை விடவும் சிறந்த மேலதிகாரியினால் வாய்ப்பதற்குத்தான் சந்தர்ப்பம் அமைகிறது. இதனால் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வேலைமேல் வெறுப்பு சேர ஆரம்பிக்கிறது.
விருப்பம் இல்லாத வேலையை வேறுவழியில்லாமல் செய்ய நேரும்போது அது என்னவாகும். அலுவலகத்தில் இருக்கும்போது, அடிக்கடி நேரம் பார்ப்பதிலேயே போகும். எந்தவேலை வந்தாலும், அதில் குற்றம் கண்டுபிடிக்கத்தோன்றும். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வேலை முடியும். கொஞ்சம் அதிகமாக முயற்சி செய்திருந்தால், நல்ல ரிசல்ட் கொடுத்து இருக்கலாம் என்று தோன்றினாலும், மனம் இதுவே போதும் என்று முடித்து விடுகிறது.
பணம் சம்பாதித்து குடும்பத்தின் பொருளாதாரத்தை சரி செய்தபின், மனதுக்கு பிடித்த வேலைக்குச் செல்லலாம் என தள்ளிப் போடுகிறோம். கொஞ்சம் நல்ல நிலைக்கு வரும்போது திருமணம் செய்து வைக்கிறார்கள். அதன்பின் ஒன்றின் பின் ஒன்றாக கடமைகள் (சொந்த வீடு, மனைவி, குழந்தை வளர்ப்பு, கல்வி .....) சேர்ந்து விடுகிறது. மனதிற்குப் பிடித்தமாக உள்ள வேலையை தேடுவதில் உள்ள சிரமங்களும், இருக்கின்ற வேலையை விடுவதில் உள்ள ரிஸ்க்கும் நம்மை கட்டிப்போடுகின்றன. அப்படியே மனதிற்குப் பிடித்த வேலை கிடைப்பது போல இருந்தாலும், அதில் வரும் வருமானத்தை வைத்து இப்போது உள்ள வாழ்க்கை தரத்தை தொடர முடிவதில்லை.
கடைசி வரை மனதுக்கு பிடித்தவேலை, விரும்பி செய்கிற வேலைக்கு போவது என்பது ஒரு கனவாகவே மாறிவிடுகிறது.
No comments:
Post a Comment