Thursday, October 27, 2011

தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 1


எனக்கு பாடப்புத்தகங்கள் தவிர வேறுபுத்தகங்களைப் படிக்கும் பழக்கம் வர காமிக்ஸ் புத்தகங்கள்தான் காரணம். அப்போதெல்லாம் காமிக்ஸ் என்று சொல்லத்தெரியாது. படக்கதை புத்தகம் என்றுதான் சொல்வேன். முதன் முதலாக காமிக்ஸ் படித்தது 8 வயதில் இருக்கும். புத்தகத்தின் பெயர் - "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்".  இந்த புத்தகம் ராணி காமிக்ஸ் வெளியிட்ட முதல் புத்தகம்.


அப்போதுதான் ராணி காமிக்ஸ் புதிதாக ஆரம்பித்த நேரம். மாதம் இருமுறை வெளியீடுவார்கள். புத்தகத்தின் விலை 50 பைசா என்று நினைக்கிறேன். ராணி காமிக்ஸ் நிறுவனத்தினர் சொந்தமாக தமிழில் கதை எழுதுவதற்கு பதிலாக வெளி நாடுகளில் இருந்து ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களின் உரிமையை வாங்கி தமிழில் மொழிபெயர்த்து வெளிவிட்டார்கள். அந்த வகையில் வந்த புத்தகங்கள் படிப்பதற்கு நல்ல சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. பெரும்பாலான கதைகள் அமெரிக்க கெளபாய்களையும், செவ்விந்தியர்களையும் பிண்ணணியாக கொண்டு வந்தன. கதையின் ஹீரோக்கள் குதிரைகளில் சவாரி செய்வதும், கை துப்பாக்கியை வைத்து சரமாரியாகச் சுடுவதும், நல்ல திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை கொடுத்தது. 


ராணி காமிக்ஸ் நிறுவனம், ஜேம்ஸ்பாண்ட் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் உரிமையை வாங்கினார்கள். அவர்களின் புண்ணியத்தால், எனக்கும் ஜேம்ஸ்பாண்ட் (OO7) பற்றித்தெரிய வந்தது. ஜேம்ஸ்பாண்ட் கதைகள் மட்டும், கிட்டத்தட்ட 30 க்கும் மேல் இருக்கும். சும்மா சொல்லவில்லை, அத்தனை கதைகளுமே ரொம்ப அருமையாக இருந்தன. ஒவ்வொரு மாதமும் காத்திருந்து படிக்கும் வழக்கமானது.
ராணி காமிக்ஸில் ஜேம்ஸ்பாண்ட் கதைகளைத்தவிர உலகப்போரின் பிண்னணியில் நடந்த கதைகளும் வந்தன.அதோடு, ராயன் என்ற துப்பறியும் நிபுணரை ஹீரோவாக வைத்தும் நல்ல கதைகள் வந்தன.தமிழில் என்று தனியாக காமிக்ஸ் (படக்கதைகள் மட்டுமே ) வந்ததாக ஞாபகமில்லை. குழந்தைகளுக்கான பத்திரிக்கைகளில் "பூந்தளிர்" மற்றும் "அம்புலிமாமா" என்ற பத்திரிக்கைக்கள் குறிப்பிடத்தக்கவை. அம்புலிமாமாவில் படக்கதைகள் வந்ததாக நினைவில்லை.


பூந்தளிரில் சில படக்கதைகளும் சிறுகதைகளும் போடுவார்கள். அதில் குறிப்பிடத்தக்க படக்கதைத் தொடர் - "கபிஷ்". கபிஷ், ஒரு புத்திசாலியான குரங்கு. அதற்கு தன்னுடைய வாலை நீட்டச் செய்யும் சக்தியும் இருந்தது. வேட்டைக்காரன் ஒருவன் தான் வில்லன். வேட்டைக்காரன் காட்டிலிருந்த மிருகங்களை பிடிக்கும்போதெல்லாம் கபிஷ் தன்னுடைய புத்திசாலித்தனத்தையும், வாலையும் பயன்படுத்தி பிடிபட்ட மிருகங்களை காப்பாற்றிவிடும். பூந்தளிரில் வந்த இன்னொரு மறக்க முடியாத படக்கதைத் தொடர் - "சுப்பாண்டி". ஒரு பக்கத்தில் மட்டுமே வரும் கதை. சுப்பாண்டி ஒரு முட்டாள்தனமான கேரக்டர். அவன் செய்யும் சேட்டைகள், நல்ல நகைச்சுவையாக இருக்கும்.

பூந்தளிர் போலவே வந்த இன்னொரு புத்தகம் "கோகுலம்" மாதம் இருமுறை வந்த பத்திரிக்கை. கோகுலத்திலும், சின்ன சின்ன படக்கதைகளுடன் சிறுகதைகள் வந்தன. புத்தகம் முழுக்க படக்கதை மட்டுமே வந்தது "ராணிகாமிக்ஸ்" மட்டுமே. ராணிகாமிக்ஸ் போலவே இன்னொரு புத்தகத்தை பள்ளி நண்பனொருவன் அறிமுகப்படுத்தினான். அந்த புத்தகம் - "முத்து" காமிக்ஸ். அதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

8 comments:

உங்கள் நண்பன் said...

நான் கூட என் வீட்டில் இது போல 250 புத்தகங்களை ( ராணி காமிக்ஸ் ) வைத்திருந்தேன் . எப்படியோ அந்த பொக்கிஷங்கள் காணாமல் போய் விட்டது . முகமூடி வீரர் மாயாவி என்ற கதாபாத்திரம் கூட உண்டு . இப்போதெல்லாம் எங்கு கிடைக்கிறது அந்த மாதிரி புத்தகங்கள் . பழைய நியாபகங்களை கிளறி விட்டீர்கள் . நன்றி

பிரசன்னா கண்ணன் said...

அந்த காலகட்டத்தில், ராணி காமிக்ஸ்ல் சாட்டயடி வீரர் பிலிப், மந்திரவாதி மாண்ட்ரேக் என்று பலரும் கதாநாயர்களாக வருவார்கள்.. நானும் விடாமல் வாசித்ததுண்டு..
ராணி காமிக்ஸிற்கு போட்டியாக முத்து காமிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ் புத்தகமும் வரும்.. நான் அதையும் விட்டு வைத்ததில்லை.. :-)
அருமையான மலரும் நினைவுகள்.. அவை திரும்பவும் வராதா என்று ஏங்க வைத்து விட்டீர்கள்..

Mugil said...

/நான் கூட என் வீட்டில் இது போல 250 புத்தகங்களை ( ராணி காமிக்ஸ் ) வைத்திருந்தேன் . எப்படியோ அந்த பொக்கிஷங்கள் காணாமல் போய் விட்டது . /

வருகைக்கு நன்றி. எனக்கும் அந்த அனுபவம் உண்டு. கிட்டதட்ட 300 க்கும் அதிகமான படக்கதை புத்தங்கள் சேர்த்து வைத்திருந்தேன். நான் காலேஜ் படிப்பதற்காக கோவை சென்றபோது, என் அண்ணன் அதை ஒசி கொடுத்து தொலைத்து விட்டார். இன்றைக்கும் நினைத்தால் வருத்தம் வருகின்ற விஷயம் அது.

/ராணி காமிக்ஸிற்கு போட்டியாக முத்து காமிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ் புத்தகமும் வரும்.. நான் அதையும் விட்டு வைத்ததில்லை.. :-)/

வருகைக்கு நன்றி. முத்து காமிக்ஸ்க்கு என்று தனியாக பதிவு எழுதலாம் என நினைத்து, இந்த பதிவில் எழுதவில்லை. அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

dhiraviyam said...

80 - களில் பிறந்து, வாசிக்கும் பழக்கமுள்ள அனைவரும் கண்டிப்பாக காமிக்ஸ்-ஐ படித்திருப்பார்கள். நான் காமிக்ஸ் படிச்சது, எங்கள் சொந்த ஊர், கொடுக்கூர்-இல் தான்(அரியலூர் மாவட்டம்). சண்முகம் என்ற நண்பர் அவ்வளவு காமிக்ஸ் புத்தகங்கள் வைத்துருப்பார். நன்றி சண்முகம்!!!

யுவகிருஷ்ணா said...

காமிக்ஸ்கள் குறித்த ஃப்ளாஷ்பேக்குக்கு நன்றி நண்பா.

நிறைய பேர் பழைய காமிக்ஸ் கலெக்டர்களாக இருக்கிறோம்.

லயன், முத்து, ராணி உள்ளிட்ட காமிக்ஸ்களில் 500க்கும் மேற்பட்டவை இப்போதும் என் சேகரிப்பில் இருக்கிறது.

எனது நண்பர் கிங் விஸ்வா அவர்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமிக்ஸ் தேறும்.

முகில் said...

@ யுவகிருஷ்ணா - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்கள் வருகை எனக்கு இன்ப அதிர்ச்சிதான்.

உங்களையும் உங்கள் நண்பர் விஸ்வாவையும் என்றேனும் பார்க்கவேண்டும். கூடவே உங்கள் இருவரின் சேகரிப்பையும் பார்த்து விட்டுப்போனவற்றை படிக்கவேண்டும். :)

King Viswa said...

// புத்தகத்தின் பெயர் - "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்". இந்த புத்தகம் ராணி காமிக்ஸ் வெளியிட்ட முதல் புத்தகம்.//

நண்பரே,

ராணி காமிக்ஸின் முதல் புத்தகம் ஜேம்ஸ் பாண்ட் தோன்றும் அழகியை தேடி என்பதே ஆகும். பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் இரண்டாவது வெளியீடே.

// அப்போதுதான் ராணி காமிக்ஸ் புதிதாக ஆரம்பித்த நேரம். மாதம் இருமுறை வெளியீடுவார்கள். புத்தகத்தின் விலை 50 பைசா என்று நினைக்கிறேன்//

ராணி காமிக்ஸ் ஆரம்பித்தது ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில். ஆனால் விலை Rs 1.50 ஆகும்.

// அம்புலிமாமாவில் படக்கதைகள் வந்ததாக நினைவில்லை.// ஆரம்பத்தில் வரவில்லை. ஆனால் தொன்னூறுகளில் வெளிவந்தது. எனவே நீங்கள் கூறியது சரிதான்.

// பூந்தளிரில் சில படக்கதைகளும் சிறுகதைகளும் போடுவார்கள்//

பூந்தளிர் இதழின் முதல் ஆண்டில் வெளிவந்த புத்தகங்களையும், கதைகளையும் பற்றிய ஒரு திறமையான ஆய்வு: பூந்தளிர் முகிழ்ந்த வரலாறு

இ.பு.ஞானப்பிரகாசன் said...

//தமிழில் என்று தனியாக காமிக்ஸ் (படக்கதைகள் மட்டுமே ) வந்ததாக ஞாபகமில்லை// - இல்லை ஐயா! தமிழிலும் முழுநீளப் படக்கதைகள் வந்ததுண்டு. என் அம்மா, மாமா போன்றோர் சிறு வயதில் படித்திருக்கிறார்கள். என் மாமா அவற்றை நான் சிறுவனாக இருந்த வரை வைத்திருந்தார். அதுவும் எவ்வளவு... ஒரு தகரப்பெட்டி நிறைய! அதில் முழுநீளச் சித்திரக்கதை இதழ்களை நான் நிறையப் படித்திருக்கிறேன். எல்லாம் தமிழ்நாட்டுக்கே உரிய மாயக்கதைகள்.

அண்மையில் வெளிவந்தவை எனப் பார்த்தால், 'பார்வதி சித்திரக்கதைகள்'தாம். எல்லாம், சிறுவர் இலக்கியத்தின் மாமன்னர் வாண்டுமாமா அவர்கள் எழுதியவை. முழுப் பட்டியல் பார்க்கச் செல்லுங்கள் http://tamilcomics-soundarss.blogspot.in/2012/10/vandumama-parvathi-chithira-kadhai.html எனும் முகவரிக்கு!

Post a Comment