நல்ல சுவாரசியமான காமிக்ஸ் புத்தகத்தின் கதை போல எடுக்கப் பட்ட படம் இது. பழங்காலத்தை பிண்ணணியாக கொண்ட கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும்.
முன்னொரு காலத்தில் அஸ்ரான் என்ற மன்னன் உலகத்தையே தன் காலடியில் கொண்டுவரப் பார்த்தான். அதற்காக மாய மந்திர வழிகளைப் பின்பற்றி ஒரு முகமூடி செய்கிறான். அந்த முகமூடி சாதாரணமானது அல்ல. ஒவ்வொரு நாட்டை தோற்கடித்த பின்னர், அந்த நாட்டு மன்னனை கொன்று, அவர்களின் உடல் எலும்புகளிலிருந்து முகமூடியைச் செய்கிறான். முகமூடிக்கு மந்திர சக்தி கொடுக்க அந்த நாட்டு இளவரசிகளைக் கொன்று அவர்களின் ரத்தத்தை முகமூடிக்கு கொடுக்கிறான். ஒவ்வொரு நாட்டை வென்றபின்னர் அஸ்ரானின் சக்தி பெருகிக்கொண்டே போகிறது. கடைசியில் வெவ்வேறு காட்டுவாசிகள் இன மக்கள் ஒன்று சேர்ந்து அஸ்ரானை ஜெயித்து விடுகிறார்கள். அஸ்ரானை கொன்று முகமூடியை துண்டு துண்டாக உடைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு காட்டுவாசி தலைவனும் முகமூடியின் ஒரு துண்டை எடுத்து கொள்கிறார்கள்.
அப்படி செய்வதன் மூலமாக முகமூடியை வேறுயாரும் மீண்டும் ஒன்று சேர்த்து விடுவதை தவிர்க்கலாம் என நினைக்கிறார்கள். உலகத்திலும் அமைதி திரும்புகிறது.
கோனன் ஒரு பழங்குடி இனத்தலைவனின் மகன். கோனன் போர்க்களத்தில் பிறந்தவன். ஒரு நாள் அவன் கிராமம் பெரிய படையால் தாக்கப் படுகிறது. கிராமத்தில் இருந்த எல்லோரும் கொல்லப் படுகிறார்கள். கிராமத்தை தாக்கியவன் காலார்(Khalar) என்ற மன்னன். காலார் முகமூடியை மீண்டும் ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு இருக்கிறான். கோனனின் தந்தையிடம் இருந்த கடைசி எலும்புத் துண்டை சேர்த்தவுடன் முகமூடி முழுமையாகிறது. முகமூடிக்கு உயர்ந்த வம்சத்தில் வந்த இளவரசியின் ரத்தத்தை கொடுத்தால், அதன் சக்தி திரும்ப வந்து விடும். கோனனையும் அவன் தந்தையையும் ஒரு பொறியில் மாட்டி விட்டு, இருவரும் இறந்து விடுவார்கள் என்று காலார் செல்கிறான். கோனனின் தந்தை தன் உயிரை கொடுத்து கோனனை தப்புவிக்கிறார்.
கோனன் தன் தந்தையைக் கொன்ற காலாரை பழிவாங்கும் எண்ணத்தோடு வளர்கிறான். இதற்கிடையில் காலார் உயர்ந்த வம்சத்தில் வந்த இளவரசியை பல வருடங்களாக தேடிக்கொண்டு இருக்கிறான். ஒரு வழியாக அப்படி ஒரு இளவரசி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அவளை பிடிக்க காலார் வருகிறான். காலரைக் கொல்ல வரும் கோனன் இளவரசியைக் காப்பாற்றி விடுகிறான். வழக்கம் போல கோனனுக்கு இளவரசி மேல் ஒரு பிரியம் வருகிறது. கோனனுக்கும் கால்ஜாருக்கும் நடக்கும் சண்டைதான் மீதிக்கதை.
படத்தின் கதை என்னவோ யுகிக்க முடிகிற ஒன்றுதான். இருந்தாலும், படத்தின் காட்சியமைப்பு நன்றாக உள்ளது. CGI தொழில் நுட்பத்தை நன்றாக உபயோகித்து உள்ளார்கள். சிறுவயது கோனனாக வரும் சிறுவன் மிக நன்றாக நடித்து உள்ளான். பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல முடியாது. Fantasy வகையான படத்தை ரசிப்பவர் என்றால் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்.
படத்தின் டிரைலர்
2 comments:
அருமையான பதிவு.
அர்னால்டு நடித்த இந்த படத்தின் பழைய வெர்ஷனைதான் பார்த்திருக்கிறேன்.
அதுவே நன்றாக இருக்கும்,இந்த
படம் விரைவில் பார்க்க வேண்டும்.
ரொம்ப நன்றி.
வருகைக்கு நன்றி குமரன். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
Post a Comment