Tuesday, November 15, 2011

தமிழ் சினிமாவில் மறந்து போன விஷயங்கள்


இப்போது வரும் தமிழ் சினிமாக்களில் வெவ்வேறு விதமான கதைக்களன் கொண்ட படங்களைக் காணமுடிவதில்லை. குறிப்பாக 1980 களில் ஆரம்பித்தது என நினைக்கிறேன். ரஜினியும் கமலும் அப்போதுதான் நல்ல பிரபலம் ஆனார்கள். அதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் எல்லா வகையான படங்களையும் காணமுடிந்தது.


ராஜாக்கள் காலத்தை பின்னணியாகக் கொண்ட படங்களை இப்போதெல்லாம் காணமுடியவில்லை. வடிவேல் நடித்த "இம்சை அரசன் 23ம் புளிகேசி" தவிர சமீபத்தில் வேறு எந்த படமும் வரவில்லை. புராணங்களை பின்னணியாகக் கொண்ட படங்கள் எல்லாம் இப்போது காலாவதியானதுபோல் உள்ளது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, SSR, ஜெமினி, நம்பியார், அசோகன் மற்றும் SV ரங்காராவ் நடித்து வெளிவந்த எத்தனையோ படங்கள் புராண கதைகளையும், பழங்கால மன்னர்களின் வாழ்க்கை வரலாறையும் வைத்து காலத்தால் அழியாவண்ணம் உள்ளன.

சிறுவயதில் பார்த்த சிவாஜியின் "திருவிளையாடல்" படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. எல்லோருக்கும் மிகப் பழக்கமான சிவாஜி, நாகேஷ் - "கேள்வி பதில்" காட்சியைப் பற்றி சொல்லவேண்டியது இல்லை. அதேபோல திருவிளையாடலில் வரும் ஒரு பாடல் "பாட்டும் நானே, பாவமும் நானே" மறக்க முடியாத ஒன்று. பாடல் வரிகள் முழுவதாக ஞாபகமில்லை என்றாலும், முதல் வரியை மட்டும் பாடிக்கொண்டிருப்பேன். மகாபாரத்தின் கதாப்பாத்திரமான "கர்ணன்" - சிவாஜியின் நடிப்பில் அம்சமாக இருந்தது. அதே போல் "சரஸ்வதி சபதம்" படமும் எந்த ஊரில் திருவிழா நடந்தாலும், போடக்கூடிய இன்னொரு தவிர்க்கமுடியாத ஒரு படம்.

எங்கள் ஊர் திருவிழாவிற்காக எம்.ஜி.ஆர் அவர்களின் - "ஆயிரத்தில் ஓருவன்" படத்தை திரைகட்டி ஒட்டினார்கள். அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை கலரில் பார்த்து "என்னமா எடுத்திருக்காங்க" என்று வியந்ததை இன்னமும் மறக்க முடியவில்லை. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் போடும் வாள் சண்டை இன்று பார்த்தாலும் போர் அடிக்காமல் இருக்கும். அதேபோல் "அலிபாபாவும் 40 திருடர்களும்" படமும் நன்றாக இருந்தது. அரச கட்டளை, நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், மலைக்கள்ளன் என பல படங்களை சொல்லலாம்.

"பாதாளபைரவி" படத்தை பஞ்சாயத்து போர்டு டிவியில் ஊரே மொத்தமாய் உட்கார்ந்து பார்த்ததும், அதில் வரும் மாயாஜாலக் காட்சிகளை கண்கொட்டாமல் பார்த்து ரசித்ததும் இன்றும் நினைவில் உள்ளது. "மாயாபஜார்" படமும், அதில் வந்த "கல்யாண சமையல் சாதம்" பாடலும் நினைவில் நிற்கும் காட்சிகள்.

இப்படி எவ்வளவோ உதாரணங்கள் சொல்லிக் கொள்ளலாம். தொழில் நுட்பங்கள் இப்போது எவ்வளவோ வளர்ந்து விட்டது. முயன்றால் மிக நல்ல படங்களை கொடுக்க முடியும். இப்போது உள்ள படங்களை நினைத்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

No comments:

Post a Comment