Thursday, November 10, 2011

Theodore Boone: Kid Lawyer 2010 / ஆங்கில புத்தகம்


ஒரு பெண்மணி அவளது வீட்டில் வைத்து கொலை செய்யப் படுகிறாள். கொலையை நேரில் பார்த்த சாட்சி எதுவுமில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் கலைத்து வீசப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த விலைமதிப்பான பொருட்கள் சிலதை காணவில்லை. தனியாக இருந்த வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவன் யாரோ தான் இந்த கொலை செய்திருக்கவேண்டும் என்று போலீஸ் நினைக்கிறது. அங்குதான் ஒரு திருப்பம்.

அந்த பெண்ணின் கணவன் தன் மனைவி பெயரில் 10 லட்ச ரூபாய்க்கு இன்ஸுரன்ஸ் பாலிசி எடுத்து வைத்திருக்கிறான். மனைவி இறந்து போனால் அந்தப் பணம் அவனுக்குத்தான் கிடைக்கும்.

அவர்கள் வசித்து வந்த இடம், பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாழும் இடம். அங்கு இதைப்போன்ற திருட்டுகள் நடந்தது இல்லை. எந்த ஒரு கொலைக்கும் பணம் அல்லது பழிவாங்குதல் தான் அடிப்படை காரணமாக இருக்கும். அந்த பெண்மணிக்கு எதிரிகள் என்று யாருமில்லை. எனவே பணம் தான் இந்த கொலைக்கு காரணம் என்று போலீஸ் நம்புகிறது. அந்த பெண்மணியின் மரணத்தால் பயனடையும் ஒரே ஆள் அந்த பெண்ணின் கணவன் என்பதால் அவன் தான் கொலை செய்திருக்க முடியும் என அவனை கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள்.

அந்த பெண்ணின் வீட்டில் பொருட்கள் காணாமல் போனது தவிர வேறு எந்த தடயமும் கிடைக்கவில்லை. கொலையாளியின் கைரேகையும் அகப்படவில்லை. கனகச்சிதமாக செய்யப்பட்ட கொலை என்பது இதுதான் என்று எல்லோரும் நம்புகிறார்கள். கொலை செய்தது அவளின் கணவன் என எல்லோரும் நம்பினாலும், சாட்சிகள் இல்லாததால் அவன் தப்பிக்கும் வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது.

Theodore Boone னின் பள்ளியில் படிக்கும் மாணவன் மூலமாக ஒரு முக்கிய சாட்சியைப் பற்றி தியோவுக்கு தெரிய வருகிறது. ஆனால் அந்த சாட்சி அமெரிக்காவில் சட்டத்திற்கு புரம்பாக தங்கி இருப்பதால் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்ல மறுக்கிறான். தியோவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கோர்ட்டிலோ வழக்கு முடியும் கட்டம் வருகிறது. தியோவால் அந்த சாட்சியை கோர்ட்டுக்கு வரவைக்க முடிந்ததா, இல்லை அந்த பெண்ணின் கணவன் தப்பித்தானா என்பதை புத்தகத்தைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

John Grisham எழுதி Theodore Boone கதையின் முக்கிய பாத்திரமாக வைத்து வந்த முதல் கதை. இந்த புத்தகத்தின் வரவேற்பைப் பார்த்து தான் Theodore Boone வைத்து தொடர் எழுத ஆரம்பித்தார் என நினைக்கிறேன். அமெரிக்க சட்டமுறைகள் மற்றும் அங்குள்ள வெவ்வேறு வகையான கோர்ட் அமைப்புகள் பற்றி நன்றாக விளக்கியுள்ளார். கதையின் பின்னணி கோர்ட் மற்றும் வழக்கு என்பதால் மந்தமாக இருக்கும் என்று நினைக்கவேண்டாம். John Grisham த்தின் எழுத்து நடையும், கதையின் பரபரப்பை துவளவிடாமல் கொண்டு செல்லும் விதமும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

No comments:

Post a Comment