Tuesday, January 3, 2012

தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 3


தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 1  - தமிழ் காமிக்ஸ் - படக்கதைகள் - 2


முத்து காமிக்ஸ் படிக்க ஆரம்பித்ததும் தெரிய வந்த முதல் காமிக்ஸ் ஹீரோ - இரும்புக்கை மாயாவி. அவரின் இயற்பெயர் - லூயிஸ் கிராண்டேல். ஆனாலும் அவரை மாயாவி என்றுதான் ஞாபகம் இருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக அவருக்கு மின்சாரத்தை தொட்டால் மாயமாக மறையும் தன்மை வரும். எடுத்துக்கொண்ட மின்சாரத்தின் அளவைப் பொறுத்து மாயமாக மறைந்து இருக்கும் நேரம் மாறுபடும்.



 முதன் முதலில் மாயாவியின் கதையைப் படித்த போது ஆறாவதோ அல்லது ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அடிப்படை அறிவு எனக்கு இருந்தது. ஆனாலும் மாயாவியின் கதைகளை படித்தபின் பல மின்சாரத்தை தொட்டு மாயமாக மறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டதுண்டு.

ஆரம்ப காலத்தில் மாயாவி வில்லனாகத்தான் இருந்தார். ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட விபத்தினால் மாயமாக மறையும் தன்மை கிடைத்ததும், அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கொள்ளை அடிக்க கிளம்பினார் மாயாவி. இதைப் பற்றி ஒரு கதையும் வெளியானது. சுவாரசியம் மிக்க கதையாக இருந்தது. கதையின் தலைப்பு எனக்கு நினைவில்லை. மாயாவி ஒரு நகரத்தில் அணுகுண்டு ஒன்றை வைத்து விட்டு, பணம் கொள்ளை அடிக்க முயல்வார். மாயாவியைப் பிடிக்க போலீஸ்காரர்கள் நகரம் முழுவதும் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். நகரை விட்டு வெளியேற முடியாமல் கடைசியில் அவரே அந்த குண்டை செயலிழக்க செய்வார். ஆய்வுக்கூடத்தில் அவரின் புரபசராக இருந்தவரின் யோசனையால் மாயாவி சட்டத்தின் பக்கம் வருவார். நிழல்படை என்னும் உளவு நிறுவனத்தில் உளவாளியாக வேலைக்கு சேர்வார்.

அதன் பின்னர் ஜேம்ஸ் பாண்ட் போல், அவரின் இரும்புக்கையில் பலதரப்பட்ட ஆயுங்களை பொருத்துவார்கள். ஓவ்வொரு விரலிலும் ஒரு ஆயுதம் இருக்கும். விரல் துப்பாக்கி, மயக்க வாயு பீச்சும் விரல்.அதே போல அவருக்கு என்று ஒரு காரும் கொடுக்கப் படும் . அந்த காரிலும் வகை வகையான கருவிகள் பொருத்தப் பட்டிருக்கும். ராக்கெட், மற்றும் தனியாங்கு இயக்கம் எல்லாம் இருக்கும். மாயமாக மறைய தேவையான மின்சாரம் வழங்க சக்தி வாய்ந்த பேட்டரி பொருத்தப் பட்டிருக்கும்.


செப்புக் கவசம் என்ற ஒரு உடையும் மாயாவிக்கு வழங்கப்படும். அந்த உடை, அவருடைய இரும்புக் கரத்தின் சக்தியை பலமடங்கு அதிகப் படுத்திக் கொடுக்கும். இக்கட்டான நேரங்களில் அந்த உடையை அணிந்து சண்டை போடுவார்.

ஒரு கதையில் வில்லனாக வரும் ஒரு விஞ்ஞானியால் மூளை சலவை செய்யப் பட்டு, நிழற்படையின் தலைமையகத்தை தாக்குவார் மாயாவி. முழு ராணுவமே அவரை எதிர்க்க வரும். ஆனாலும், அத்தனை பேரையும் தாண்டி, தலைமையத்தில் புகுந்து எல்லா ரகசியத்தையும் திருடி விடுவார். அந்த கதையின் சுவாரசியத்தை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. விறுவிறுப்பான ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருந்தது.

அதேபோல இன்னொரு கதையில் - வேற்று கிரகத்திலிருந்து பூமியை ஆக்கிரமிக்க வரும் எலக்ட்ரான்களிடமிருந்து பூமியைக் காப்பாற்றும் கதை. அப்பப்பா... படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழே வைக்க மனசு வராது.

இன்னும் எவ்வளவோ நல்ல கதைகள் மாயாவியை வைத்து வெளிவந்தன. உங்களுக்கு பிடித்த கதையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் இன்னுமொரு பெயர் வாங்கிய ஹீரோவைப் பற்றிப் பார்க்கலாம்.

8 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

இவரின் கதைகளை வாசித்ததில்லை. ஆனால் முகமூடிவீரர் மாயாவி, மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ்களை நண்பர்களிடம் வாங்கி வாசித்திருக்கிறேன். இப்போதெல்லாம் இவை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.

ஞாபகங்களை மீட்டியதற்கு நன்றி பாஸ்.

ராஜ் said...

பாஸ்,
நிறைய "ஆட்டோகிராப்" ஞாபகங்களை இந்த பதிவு எனக்கு ஏற்படுத்தியது...

ராணி காமிக்ஸ்..... இதில் தான் முகமுடி வீரர் மாயாவி, மாடஸ்டி பிளைசி, மூன்று குதிரை வீரர்கள் அவர்களின் கதைகள் வரும்.
முத்து காமிக்ஸ்... இதில் தான் இரும்புக்கை மாயாவி, லக்கி லுக், மொண்ட்ரேக் , ஜேம்ஸ் பான்டு, போன்ற பல கதைகள் வரும்.

Bala said...

@ஹாலிவுட்ரசிகன் - நன்றி.
@ ராஜ் - நன்றி. சென்னை புத்தக கண்காட்சியில் லயனின் கடந்த 10 வருட புத்தகங்கள் கிடைப்பதாக படித்தேன். விரைவில் வாங்க வேண்டும்.

Vidhya Chandrasekaran said...

சிறுவயதில் என்னுடைய ஆதர்ச ஹீரோக்களில் ஒருவர் இரும்புக்கை மாயாவி.

நல்ல பகிர்வு.

Unknown said...

எழுதுங்கள்... எங்கள் சிறு வயசு ஞாபகங்களைத் தட்டி எழுப்புங்கள். இதுவும் ஒரு சுகானுபவம்தான்.

King Viswa said...

// ஆரம்ப காலத்தில் மாயாவி வில்லனாகத்தான் இருந்தார். ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட விபத்தினால் மாயமாக மறையும் தன்மை கிடைத்ததும், அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கொள்ளை அடிக்க கிளம்பினார் மாயாவி. இதைப் பற்றி ஒரு கதையும் வெளியானது. சுவாரசியம் மிக்க கதையாக இருந்தது. கதையின் தலைப்பு எனக்கு நினைவில்லை//

நியூயார்க்கில் மாயாவி.

//ஆய்வுக்கூடத்தில் அவரின் புரபசராக இருந்தவரின் யோசனையால் மாயாவி சட்டத்தின் பக்கம் வருவார்//

ஃபுரொபெசர் பாரிங்கர்.

//ஒரு கதையில் வில்லனாக வரும் ஒரு விஞ்ஞானியால் மூளை சலவை செய்யப் பட்டு, நிழற்படையின் தலைமையகத்தை தாக்குவார் மாயாவி. முழு ராணுவமே அவரை எதிர்க்க வரும். ஆனாலும், அத்தனை பேரையும் தாண்டி, தலைமையத்தில் புகுந்து எல்லா ரகசியத்தையும் திருடி விடுவார். அந்த கதையின் சுவாரசியத்தை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. விறுவிறுப்பான ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருந்தது.//

இயந்திரப்படை. இந்த கதையின் இரண்டாவது பாகமே இந்த வருடம் ஏப்ரல் மாதம் முத்து காமிக்ஸ் இதழில் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் என்ற வெளியீட்டில் எட்டுக்கர எத்தன் என்கிற பெயரில் வருகிறது.மேலதிக விவரங்களுக்கு: தமிழ் காமிக்ஸ் உலகம் லயன் கம்பேக் ஸ்பெஷல் 2012

//அதேபோல இன்னொரு கதையில் - வேற்று கிரகத்திலிருந்து பூமியை ஆக்கிரமிக்க வரும் எலக்ட்ரான்களிடமிருந்து பூமியைக் காப்பாற்றும் கதை. அப்பப்பா... படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழே வைக்க மனசு வராது.//

விண்வெளி கொள்ளையர். அந்த கதையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள இந்த லிங்கில் செல்லவும்: விண்வெளிக் கொள்ளையர்!

Bala said...

@வித்யா - வருகைக்கு நன்றி.

@வெண் புரவி - வருகைக்கு நன்றி.

@King Viswa - வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றிகள் பல.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சின்னதுல படிச்சுருக்கேன், உங்க போஸ்ட் அதை ஒட்டிய நினைவுகளையும் தூசி தட்டி விட்டுடுச்சு... :)Good one

Post a Comment