Friday, December 30, 2011

Shall We Dance (2004)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில படம்


மனித மனம் எப்போதுமே ஒரு துடிப்பை, ஒரு புதிய அனுபவத்தை எதிர் நோக்கியபடியே இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் வாழ்க்கையில் இல்லாதபோது அதற்காக ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் எல்லா நாளுமே ஒரே மாதிரியாக கழிந்து கொண்டிருந்தால் காலப் போக்கில் ஒரு எந்திரமாக வாழ பழகி தன் இயல்பை தொலைத்து விடுகிறோம். இப்படி தொலைத்தது கூட தெரியாமலேயே வாழ்க்கையை கழித்தவர்கள் தான் ஏராளம். மத்திம வயதை கடந்தவர்களிடம் பேசிப் பார்த்தால், பெரும்பாலானோர் சொல்வது "என்னமோ வாழ்க்கை ஒடிக் கொண்டு இருக்கு" என்ற விரக்தியான பதிலாக இருக்கும். நம் முகத்திலேயே அந்த சலிப்பும் ஒரு வகையான சோகமும் தெரியும்.

ஜான் கிளார்க் (Richard Gere) வழக்கறிஞராக இருப்பவர். மனைவி, ஒரு பையன், ஒரு பெண் என்று அளவான குடும்பம். மனைவியும் வேலைக்கு போகிறாள். பொருளாதாரத்தில் சிரமமும் கிடையாது. ஜானுக்கு வாழ்க்கையில் எல்லாமே நன்றாக இருப்பதுபோல இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவதாகவே நினைக்கிறார். ஜான் 20 வருடங்களுக்கு மேலாக வழக்கறிஞராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் உயில் எழுதும் வேலைதான் அதிகம். எல்லா நாட்களும் ஒரே மாதிரி போவதால் வாழ்க்கை மந்தமாக போவதை ஜான் உணர்கிறார். ஒரு நாள் ட்ரெய்னில் வீடு திரும்பும் போது அருகில் இருக்கும் டான்ஸ் ஸ்கூலின் விளம்பரத்தைப் பார்க்கிறார். அந்த ஸ்கூலின் ஜன்னலோரத்தில் அழகான ஒரு பெண் (Jennifer Lopez) நிற்பதையும் பார்க்கிறார். சில நாட்கள் இப்படிப் பார்த்தபின் ஒரு நாள் அந்த ஸ்கூலிற்கு செல்கிறார்.

ஜன்னலில் பார்த்தபெண் அந்த ஸ்கூலில் டான்ஸ் மாஸ்டராக இருப்பது தெரிந்து, டான்ஸ் கற்றுக் கொள்ள சேர்கிறார். ஆனால் இந்த விஷயத்தை தன் மனைவியிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் Jennifer Lopez ஜானை திட்டி விடுகிறார். அதனால் டான்ஸ் ஸ்கூலிற்கு போக வேண்டாமென்று நினைத்தாலும், டான்ஸ் ஆடியபோது கிடைத்த சந்தோசத்தை நினைத்து மீண்டும் டான்ஸ் ஸ்கூலிற்கு செல்ல ஆரம்பிக்கிறார். டான்ஸ் ஆடுவதனால் கிடைக்கும் சந்தோசம் ஜானின் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. இதற்கிடையே ஜானின் மனைவிற்கு அவரின் நடவடிக்கையால் சந்தேகம் வந்து ஒரு தனியார் துப்பறிவாளரிடன் செல்கிறார். அதன் மூலமாக ஜான் டான்ஸ் ஸ்கூலிற்கு செல்வது தெரியவருகிறது. அதன் பின் என்னவாகிறது என்பதை மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிடத்தக்க காட்சிகள்: டான்ஸ் காட்சிகள் அனைத்துமே நன்றாக படமாக்கப் பட்டுள்ளது. பார்க்க பார்க்க நமக்குள்ளும் அந்த சந்தோசம் படர்வதை உணர முடிகிறது. அதேபோல படம் பார்த்து முடித்ததும் டான்ஸ் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம் கண்டிப்பாக வரும். ஜானின் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் லின்க் என்பவருக்கும் டான்ஸில் விருப்பம். அவர் அடிக்கும் லூட்டிகள் நல்ல காமெடி. ஜானின் மனைவி துப்பறிவாளரிடம் திருமணத்தைப் பற்றி பேசிக்கொள்ளும் காட்சி.

இந்தப் படம் 1996ல் வெளிவந்த Shall we dansu என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்பதை இந்த பதிவு எழுதும்போதுதான் தெரிந்து கொண்டேன். Shall we dansu படம் பார்த்து விட்டு அதைப் பற்றியும் ஒரு பதிவு போடுகிறேன்.

இந்தப் படம் யூ ட்யூபில் நல்ல பிரிண்டாக கிடைக்கிறது. படத்தின் டிரைலர்


5 comments:

Kumaran said...

இந்த சில நாட்களுக்கு முன்னமே ஐஎம்டிபியில் பார்த்தேன்..பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலேயே மறந்துவிட்டேன்..நல்ல வேளையாக ஞாபகம் செய்ததோடு நல்ல விமர்சனம் சொல்லிட்டீங்க, தங்களது சில வரிகள் என்னை சிந்திக்கவைக்கின்றன.இந்த படத்தை எனது வாட்ச்லிஸ்டில் சேர்த்துவிட்டேன். பார்க்க வேண்டும்..எல்லோரு நல்ல படங்கள் எழுத பார்க்க வேண்டிய படங்கள் கூடிக்கொண்டே போகின்றது..நன்றி,, நல்ல பதிவு.தொடருங்கள்..

ஹாலிவுட்ரசிகன் said...

// Shall we dansu //

இது நம்ம கொலைவெறி English-u மாதிரி இருக்கே ... :P

நல்ல அறிமுகம். நன்றி.

முகில் said...

@குமரன் - நன்றி.
// எல்லோரு நல்ல படங்கள் எழுத பார்க்க வேண்டிய படங்கள் கூடிக்கொண்டே போகின்றது. //
எனக்கும் இந்த பிரச்சனை உண்டு. நாளுக்கு நாள் புதிய படங்களின் அறிமுகம் கிடைக்கும்போது அவற்றை பார்ப்பதற்கான நேரம் ஒதுக்குவது சிரமம்தான்.

@ ஹாலிவுட் ரசிகன் - நன்றி.

ராஜ் said...

////எல்லா நாளுமே ஒரே மாதிரியாக கழிந்து கொண்டிருந்தால் காலப் போக்கில் ஒரு எந்திரமாக வாழ பழகி தன் இயல்பை தொலைத்து விடுகிறோ////

பாஸ்,

உண்மையான வரிகள்.... நாம் எப்போதும் ஒரே மாதிரி (Routine work) திரும்ப திரும்ப செய்து கொண்டே இருக்கும் வேலையில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுக்க வேண்டும்... அல்லது வேறு ஏதோவொரு பிடித்த வேலையில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்..... இல்லாவிட்டால் நாம் எந்திரம் போல் ஆகி விடுவோம்...

சிலருக்கு டான்ஸ்...சிலருக்கு "ப்ளாக்" எழுதும் வேலை..... நான் ப்ளாக் எழுதுவது கூட மேலே சொன்ன காரணத்திற்காக தான்..

கண்டிப்பாய் படம் பார்த்து விட்டு என் கருத்தை பதிவு செய்கிறேன்..

முகில் said...

@ராஜ் - நன்றி. நீங்க சொன்னதும் வாஸ்தவம்தான். ஒவ்வொருத்தரும் தனக்கு விருப்பமான எதாவது ஒரு விசயத்தை தவறாம செய்ய ஆரம்பிக்கணும். அதுதான் வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

Post a Comment