Wednesday, December 28, 2011

Spirit: Stallion of the Cimarron (2002)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில படம்




நானே ராஜா நானே மந்திரி என்று சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கும் உங்களை அடிமைப்படுத்தி அடிமாட்டு வேலை செய்யவைத்தால் எப்படி இருக்கும். இழந்த சுதந்திரத்தை பெற உயிர் இருக்கும் வரை போராடுவீர்கள்தானே. சுதந்திரம் என்பது மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறு வேறா என்ன? காட்டில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த ஸ்பிரிட் என்ற பெயர் கொண்ட ஸ்டாலியன் வகையைச் சேர்ந்த குதிரையைப் பற்றிய கதை தான் இந்தப் படம்.


படத்தின் துவக்க காட்சியிலேயே நம்மை வசப்படுத்தி விடுகிறார்கள். ஒரு கழுகு பறக்க ஆரம்பிக்கிறது. வானத்தில் இருந்து கீழே வந்து, பெரிய கணவாயில் செல்லும் ஆற்றின் மீது தண்ணீரை தொட்டுக் கொண்டு பறக்கிறது. ஆற்றிலிருந்து காட்டுக்குள் செல்கிறது. காட்டில் உள்ள சிறு பறவைகள், மான்கள் பார்க்க இவற்றை கடந்து பறக்கிறது. காட்டின் நடுவே இருக்கும் ஆற்றையும், அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருக்கும் கரடிகளை கடந்து பறக்கிறது. காட்டெருமைகளை கடந்து புல்வெளிகளின் மீது பறக்கும்போது குதிரைகளின் கூட்டம் ஒன்று ஓடி வருகிறது. குதிரைகளின் ஓட்டத்திலிருந்து மீண்டும் ஒரு புல்வெளியையும், அதில் ஒரு குதிரை படுத்துக் கிடப்பதையும் பார்க்கிறோம். அந்த குதிரைக்கு பிரசவம் ஆகிக்கொண்டு இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் ஒரு குட்டி குதிரை பிறக்கிறது. அந்த குட்டி குதிரை தான் படத்தின் ஹீரோ (இவ்வளவு பில்டப் காட்சிகளுக்குப் பிறகு இன்னேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.. :) )

ஸ்பிரிட் நல்ல கம்பீரத்துடனும் குதிரைக் கூட்டத்தின் தலைவன் என்ற எண்ணத்தோடும் வளர்ந்து வருகிறது. ஸ்பிரிட்டடின் எண்ணவோட்டங்கள், அதன் பெருமிதம் போன்ற உணர்ச்சிகள் சுவையாக காட்டப் பட்டுள்ளது. அந்த காடு இருக்கும் இடத்தின் அருகே ரயில் பாதை போடும் வேலை நடக்கிறது. ரயில் பாதை வேலைக்கு தடையாக இருக்கும் செவ்விந்தியர்களை அடக்க ராணுவம் முகாமிட்டு இருக்கிறது. ஒரு நாள் ராணுவத்தினர் முகாமிட்டுள்ள இடத்தில் இருந்து வரும் வெளிச்சத்தைப் பார்த்து அங்கே சென்று அவர்களிடம் மாட்டிக் கொள்கிறது. ராணுவத்தினர் ஸ்பிரிட்டை பிடித்து செல்கின்றனர். அவர்களிடமிருந்து ஸ்பிரிட் எப்படி தப்பிக்கிறது என்பது மீதிப் படத்தில் சொல்லப் படுகிறது.

எப்பவும் போலவே இதிலும் காதலை இணைத்திருக்கிறார்கள். ஸ்பிரிட் ஒரு அழகான பெண்குதிரையைப் பார்த்து அதன் மேல் விருப்பம் கொள்கிறது.

குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்று நிறைய சொல்லலாம். மிருகங்கள் எதுவும் மனித குரலில் பேசிக்கொள்வது இல்லை. அவைகளின் எண்ணவோட்டங்கள் மட்டும் அவ்வப்போது சொல்லப் படுகிறது. அதேபோல படம் முழுவதும் நல்ல காட்சியமைப்பு. காடும் அது சார்ந்த இடங்கள், மலையில் உள்ள கணவாய்களில் வரும் துரத்தல் காட்சி போன்றவை நன்றாக எடுக்கப் பட்டுள்ளன. ஸ்பிரிட்டை அடக்குவதற்கு ராணுவத்தினர் படும்பாடு நல்ல நகைச்சுவையாக இருக்கும். ஸ்பிரிட் பெண்குதிரையிடம் அசடு வழியும் காட்சிகள்.

இந்த படம் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை யூ ட்யூப் பில் நல்ல பிரிண்ட்டில் பார்க்கலாம்.

படத்தின் டிரைலர்:



6 comments:

Kumaran said...

நல்ல அனிமேஷன் படத்தை தேடிக்கொண்டிரும்பொழுது ஓர் அருமையான திரைவிமர்சனத்தையே தந்துட்டீங்க.பார்க்க நேரம் + வாய்ப்பு கிடைப்பின் கண்டிப்பாக பார்க்கிறேன்.
மற்றபடி சொல்ல வேண்டுமா என்ன ? சிறப்பான விமர்சனம்..காட்சிகளை எழுத்தில் அலங்கரித்த விதம் அழகான ரகம்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே,

ஹாலிவுட்ரசிகன் said...

கார்ட்டூனா??? அப்போ முடிஞ்சவரை சீக்கிரமே பாத்துரணும். ஆனா அடுத்த வருஷம் தான். :)

விமர்சனத்திற்கு நன்றி.

Bala said...

@Kumaran - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

@ஹாலிவுட்ரசிகன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

ஆதவா said...

இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த டு டி வகை அனிமேசன் படம். படம் முடியும் வரையும் ஒரு ஃபீல் இருக்கும். படத்தின் மிக முக்கிய உயிரோட்டமாய் பாடல்களைச் சொல்லலாம், ப்ரய்ன் ஆடம்ஸின் அனைத்து பாடல்களும் உருக வைக்கும் இசையும் இப்படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதை மறுக்க முடியாது.

நல்ல படம், மிக நல்ல படம், பார்க்கவேண்டிய படம்!

ம.தி.சுதா said...

மிகவும் ரசிக்கும் வகையில் சுருக்கமாகவே பகிர்ந்துள்ளீர்கள் நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

Bala said...

@ஆதவா - நன்றி. நானும் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.

@ ம.தி.சுதா - நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Post a Comment