Thursday, November 17, 2011

Legend of the Guardians: The Owls of Ga'Hoole (2010) / உலக சினிமா / அமெரிக்கா - ஆங்கில படம்



இது ஒரு நல்ல ஆக்சன் கலந்த, சாகசங்கள் நிறைந்த அனிமேசன் படம். இரண்டு சகோதரர்கள். ஒருவர் நல்ல சக்தியுடனும் இன்னொருவர் தீய சக்தியுடனும் சேர்வதும், முடிவு என்னவாகிறது என்பதும் தான் இந்தப் படத்தின் கதை.


இன்னமும் பறக்கத்தெரியாத குட்டி ஆந்தைகள் - சோரன் மற்றும் குளுட். இரண்டு சகோதரர்கள். கவூல் கார்டியன் என்னும் ஆந்தை ஹீரோக்களைப் பற்றிய கதை கேட்டு வளர்கிறார்கள். முன்னொரு காலத்தில் தீயசக்திகள் தலைஎடுத்தபோது, கார்டியன்கள் தான் அவைகளோடு சண்டையிட்டு அமைதியை கொண்டு வந்தார்கள். கார்டியன்கள் தற்போது இருக்கிறார்களா இல்லையா என யாருக்கும் தெரியாது.

சோரன் மற்றும் குளுட்க்கு அவர்களின் பெற்றோர் பறக்க கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பப்பாடம் என்னவோ, மரத்தில் இருக்கும் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு பறப்பதுதான். அன்று இரவு, சோரனின் பெற்றோர், வேட்டைக்கு போனபின்னர், இருவரும் தனியாகப் பறக்க நினைத்து வெளியில் செல்லும்போது வேறு வகையான ஆந்தைகளால் கடத்தப்படுகிறார்கள்.

இவர்களைப் போன்று நிறைய குட்டி ஆந்தைகள் கடத்தப் பட்டு, ஏஜிலோஸ் என்ற மலைக்கு எடுத்து செல்லப் படுகிறார்கள். அந்த மலையில் லார்டு டைட்டோ (மெட்டல் பீக்)என்ற ஆந்தை ஒரு ஆந்தை ஆர்மியை தயார் செய்து வருகிறது. லார்டு டைட்டோவின் மனைவி நைராதான் இந்த வேலைகளை மேற்பார்வையிடுகிறது. கடத்தி வரப்பட்ட ஆந்தைகளை அவர்களுக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாகவும், சண்டை போடும் சோல்ஜார்களாகவும் மாற்றுகிறார்கள். குளுட் சோல்ஜாராக மாற ஆசைப்பட்டு சோரனை விட்டு விலகுகிறது. லார்டு டைட்டோவின் திட்டம், அந்த மலையில் கிடைக்கும் ஒரு வகையான கற்களை சேகரிப்பது. காரணம், அந்த கற்களுக்கு ஆந்தைகளை பறக்க முடியாமல் செய்யும் சக்தி உள்ளது. அந்த கற்களை போதுமான அளவு சேகரித்ததும், கார்டியன்களை சண்டைக்கு வரவைத்து, கற்களின் சக்தியை கொண்டு கார்டியன்களை தோற்கடிக்க திட்டம் போடுகிறது.

சோரன் ஜைல்பி என்னும் இன்னொரு குட்டி ஆந்தையுடன் அந்த மலையிலிருந்து தப்பிக்கிறது. அவர்கள் தப்பிப்பதற்கு உதவிய இன்னொரு ஆந்தை, கார்டியன்கள் இன்னும் இருப்பதாகவும், அவர்களிடம் போய் உதவி கேட்குமாறும் சொல்லுகிறது.

சோரனால் கார்டியங்களை கண்டுபிடிக்க முடிகிறதா? லார்டு டைட்டோவின் திட்டம் பலித்ததா? சோரனும் குளுட்டும் மீண்டும் சந்தித்தார்களா? இப்படிப் பல கேள்விகளுக்கு படத்தைப் பார்த்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் குறிப்பிடத்தக்க விஷயங்கள்: படத்தின் கேரக்டர்களாக ஆந்தைகளை வைத்து எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமான முயற்சி, நன்றாகவே வந்து உள்ளது. அவ்வப்போது வரும் - ஸ்லோமோஷன் காட்சிகள், படத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. குளுட் ராணி நைராவின் அபிமானத்தைப் பெற, குருவியைப் போட்டி போட்டு பிடிக்கும் காட்சி நல்ல முறையில் படமாக்கப் பட்டுள்ளது. சோரனும், ஜைல்பியும் ஆந்தைகளிடமிருந்து தப்பிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. ஆந்தைகளின் சண்டைக் காட்சிகளை, வெறுமனே பறவைகள் சண்டை போடுவதாகக் காட்டாமல், அவைகளுக்கும், தலைக் கவசம், கால்களில் உலோகத்தினாலான கொக்கிகள் என்று கொடுத்து சண்டை காட்சிகள் எடுத்திருப்பது நல்ல உத்தி.

உதாரணத்திற்கு இந்த காட்சியைப் பாருங்கள். கடலின் மேல் மழையில் பறக்க சோரன் கற்றுக்கொள்ளும் காட்சி.


இதைப் போன்று நிறைய காட்சிகள் கண்களுக்கு நிறைவாக உள்ளன. இது பார்த்தே தீரவேண்டிய பாடம் என்று சொல்வேன். படத்தின் டிரைலர் இதோ.



ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாமல் நல்ல சுவாரசியத்துடன் படம் செல்கிறது. பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

2 comments:

மயூரேசன் said...

நல்ல விமர்சனம். அண்மையில் வீடியோ டிவிடி கடையில் இந்த திரைப்படத்தைக் கண்டேன். அடுத்த முறை செல்லும் போது நிச்சயம் வாங்கி விடவேண்டியதுதான். :)

Bala said...

@மயூரேசன் - வருகைக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Post a Comment